என் சம்மதம் இல்லாமல் என்னை எப்படி பெற்றெடுக்கலாம்?'' - அதிர வைக்கும் வாலிபரின் கேள்வி!


மும்பையைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ரபேல் சாமுவேல் உயிர் ஜனனத்துக்கு எதிரான கொள்கையுடையவர் என கூறப்படுகிறது. ஒரு உயிர் பிறப்பது புவிக்கு பாரம் என கூறும் இந்நபர் தனது பெற்றோர் தன்னை பெற்றெடுத்தது குற்றம் என்கிறார். இதற்காக நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாகவும் அறிவித்ததாக தினகரன் நாளிதழ் கூறுகிறது.

ரபேல் சாமுவேல் தனது பேஸ்புக் பதிவில், '' நான் எனது பெற்றோரை நேசிக்கிறேன். ஆனால் அவர்கள் தங்கள் சுகத்துக்காகவும் மகிழ்ச்சிக்காகவும்தான் என்னை பெற்றெடுத்துள்ளனர். யாரோ ஒருவர் சுகம் அனுபவிக்க நான் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? நான் ஏன் உழைத்து சம்பாதிக்க வேண்டும்? இதனால் எனது சம்மதம் இல்லாமல் என்னை பெற்றெடுத்த எனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்'' என குறிப்பிட்டுள்ளதாக அந்நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

'' இந்த பூமியில் இனப்பெருக்கம் என்பதே நாசிசவாதம். ஏன் குழந்தை பெற்றுக்கொள்கிறீர்கள் என யாரிடமாவது கேளுங்கள், அவர்களது பதில் ' எங்களுக்கு தேவை அதனால் பெற்றுக்கொள்கிறோம்' என்பதாகத் தான் இருக்கும்'' என பேட்டியளித்துள்ளார்.

Comments