சித்திரை திருவிழா : அதிர்வேட்டு முழங்க அழகர் மலையை விட்டு வந்த கள்ளழகர் - மதுரையில் எதிர்சேவை

மதுரை: வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையிலிருந்து கள்ளழகர் நேற்று மாலை தங்கப்பல்லாக்கில் புறப்பட்டார். அதிகாலையில் மதுரைக்குள் வந்த அழகரை மூன்று மாவடி அருகே சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி வைத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்சேவை செய்தனர். கள்ளழகர் போல வேடமிட்ட பக்தர்கள் நீரை பீய்ச்சியடித்து உற்சாகமடைந்தனர்.

அழகர்கோவில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகள் விண்ணை பிளக்க கோவிந்தா கோவிந்தா என்று பக்தர்கள் கோஷமிட கள்ளழகர் புறப்பாடு நடந்தது. கண்டாங்கி புடவை கட்டி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்படும் முன்பாக காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பசாமியிடம் உத்தரவு பெறுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது,சித்திரை திருவிழாவிற்கு அழகர் மதுரைக்கு புறப்படும்போதும் மதுரையிலிருந்து கோவிலுக்கு திரும்பும்போதும் அழகர் அணிந்த நகைகள் எண்ணப்பட்டு அந்த பட்டியல் பதினெட்டாம் படி கருப்பசாமி முன்பு படித்து காட்டப்படும். கோவில் நகைகளை காவல் தெய்வம் கருப்பசாமியே பாதுகாத்து வருகிறார் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை.

Comments