யாழ்ப்பாணம், "பருத்திதுறை ஓடக்கரை அப்ப கடைகள்"

.. எங்கள் எள்ளுப் பாட்டன் காலத்திலிருந்தே பருத்தித்துறையூரில் ஓடக்கரை மிகவும் பிரசித்தம் பெற்றிருந்தது. மிகவும் சனநெருக்கடியான இடமாக இருந்திருக்கிறது. அந்நாட்களில் பருத்தித்துறை துறைமுகம் பிரசித்த துறைமுகமாக விளங்கியது. கப்பல் வாணிபம் நடைபெற்றது. அதனால் அக்காலத்தில் உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிகள் பலவும் இந்நகரில் இருந்தன. முன்னர் பர்மா, இந்தியாவிலிருந்து தேக்கு மரங்கள் கப்பல்களில் கொண்டு வரப்பட்டு ஆலய கட்டுமான வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டன. வீட்டு ஓடுகளும் இந்தியாவிலிருந்து கப்பல்களில் வந்து இறங்கியதாக அறியப்படுகின்றது. இந்திய, சீனப் பட்டுகளும் கொண்டுவரப் பட்டு விற்கப்பட்டன. இந்நகர் ஓர் வணிக நகராக இருந்ததால் இந்நகரை அண்டியுள்ள பிரதேசங்களிலிருந்து தொழிலுக்காக பல மக்களும் இங்கு வந்து குடியேறினார்கள். இந்நாட்களில் படித்த சிலர் சிங்கப்பூர், பர்மா நாடுகளில் தொழில்புரியவும் சென்றார்கள். அதனால் அந்நாட்டு உணவு முறைகளையும் நாளடைவில் இந்நகர மக்கள் அறிந்திருந்தனர். அம்முறையில் பலவகை உணவுகளும் அறிமுகமாயின. நகரத்தில் கூலிக்காக வேலை செய்பவர்களுக்கு உணவுத்தேவை ஏற்பட்ட வேளைகளில் வீடுகள் தோறும் சிறிய தட்டிகள் வைத்து உணவு விற்பனை செய்யும் வழக்கம் இத்தெருக்களில் ஏற்படலாயிற்று. இங்கு தயாரிக்கும் உணவுகள் மிகவும் சுவைமிக்கதாக இருந்தது. அவற்றின் சுவையோ சொல்லி மாளாது. அதனால் சுற்று வட்டாரத்தில் ஏறத்தாழ ஆறு மைல்கள் தூரம் வரையுள்ள மக்கள் இங்கு வந்து உணவை வாங்கிச் செல்லும் வழக்கம் உருவாயிற்று. விசேடமாக இவர்கள் தயாரிக்கும் முட்டை அப்பம், வெள்ளை அப்பம், தோசை, பொரிவிளாங்காய், வெள்ளை முறுக்கு, இனிப்பு சிப்ஸ், தட்டை வடை, சீடை, கச்சான் தட்டு இன்னும் பல கூறலாம். சீனாவிலிருந்து வரும் 'புட்டரிசி' என்ற ஒருவகை அரிசியை ஆவியில் வேகவைத்து தேங்காய், சர்க்கரை சேர்த்து உண்பார்கள். இது மிகவும் சுவையாக இருக்கும். நகரைச் சுற்றியுள்ள மக்கள் தமது வாழ்க்கையில் ஓரிரு தடவையேனும் இவ்வுணவை ருசிக்காமல் இருந்திருக்கமாட்டார்கள். மாலையானால் உணவு வாங்குவதற்காக சுற்று வட்டாரங்களிலிருந்து மக்கள் நடையாகவும், சைக்கிள்களிலும் ஓடக்கரையை நோக்கிச் செல்வதைக் காணலாம். சிறிய அகலம் குறைந்த அந்தப் பாதையால் செல்வோர் தொகை கணக்கில் அடங்காது. சைக்கிள்கள் அவசரமாக விரைந்தால் ஒன்றுடன் ஒன்று இடிபட்டுக் கிடக்கும். மிகவும் நிதானமாகவே இங்கு செல்ல வேண்டும். அண்டிய ஊர்களில் காய்ச்சல் வந்தவர்களுக்கு காய்ச்சல் மாறியதும் பத்திய உணவாக முதலில் கொடுப்பது இங்கு செய்யப்படும் வெள்ளை அப்பத்தையே. பலதடவைகள் நடந்திருக்கிறது. விசேடமாக இவர்கள் தயாரிக்கும் தோசை அதற்கான மூன்று நான்கு வகை அம்மியில் அரைத்த சட்னி, சம்பல், கறிவகைகள், பொடி சம்பல் என அனைத்தும் சுவையானது. மெத்தென்ற தோசை அதன்மேல் பச்சை மிளகாய் சட்னி, அதன்மேல் தோசை சிவப்புக் காரச் சட்னி, அதன்மேல் தோசை காரக்கறி, பொடி சம்பல், என மாற்றி மாற்றி அடுக்கிக் கொடுப்பார்கள். கால ஓட்டத்தில் இப்பொழுது ஓரிரு வீடுகளில் மட்டும் தட்டி வைத்து விற்பதைக் காணலாம். சம்பல் ஊறி மெத்தென இருக்கும். தோசை சாப்பிட வீட்டில் போட்டி நடக்கும். விசேடமாக தோசைக்கு ஒரு காரக்கறி வைப்பார்கள். காரத்தில் கண்ணில் நீர்வடிய நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு சாப்பிடுவதிலும் சுவை இருக்கத்தான் செய்தது. அதன் சுவைக்கு எதுவும் இணையில்லை ...

Comments