Happy Birthday AR Rahman Sir

முதல் சம்பளம், ரஹ்மான் ஸ்ட்ரீட், ஒபாமாவின் வாழ்த்து! - ரஹ்மான் பற்றிய 15 சுவாரஸ்யங்கள்! `இசைப்புயல்', மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மானின் 54-வது பிறந்தநாள் இன்று. திலீப் குமார் என்ற பெயரோடு பிறந்தவர், தனது 23-வது வயதில் மதகுரு, காத்ரி இஸ்லாமின் வழிகாட்டுதலோடு இஸ்லாம் மதத்தைத் தழுவினார் ரஹ்மான். இவரின் அப்பா ஆர்.கே.சேகர், மலையாள திரைத்துறையில் 50 படங்களுக்கு மேல் இசையமைத்தவர். ரஹ்மானின் 9 வயதில் அவரின் தந்தை மரணமடைந்தார். ஒரே நேரத்தில் 4 கீ போர்டுகள்! சிறுவயதில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான `வொன்டர் பலூன்' என்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 4 கீ போர்டுகளை வாசித்து மக்கள் மத்தியில் கவனம் பெற ஆரம்பித்தார் ரஹ்மான். கம்ப்யூட்டர் இன்ஜினீயர் கனவு! கம்ப்யூட்டர் இன்ஜினீயர் ஆக வேண்டுமென்பதுதான் ரஹ்மானின் சிறுவயதுக் கனவாக இருந்தது. ஆனால், இசைத்துறையில் ஈடுபாடுகொண்ட காரணத்தால், 15 வயதிலேயே பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார் ரஹ்மான். இசைக் கச்சேரிகளில் தனித்துவத்தோடு வாசித்த காரணத்தால், உதவித் தொகை பெற்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில், `வெஸ்டர்ன் கிளாசிக்கல் மியூசிக்'கில் பட்டமும் பெற்றார். முதல் படம் ரோஜாவா, யோதாவா? இளம்வயதிலேயே இளையராஜாவின் இசைக் குழுவில் கீ போர்டு வாசிக்கத் தொடங்கினார். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், ரமேஷ் நாயுடு உள்ளிட்ட கலைஞர்களோடும் பணியாற்றினார். திரைத்துறையில் முழுமையாகக் களமிறங்குவதற்கு முன் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்து சம்பாதித்து வந்தார் ரஹ்மான். முதல் சம்பளம்! சிறுவயதில் ரெக்கார்ட் ப்ளேயரை இயக்கியதற்காக 50 ரூபாயை முதல் சம்பளமாகப் பெற்றார் ரஹ்மான். தான் இசையமைத்து வெளியான முதல் படமான `ரோஜா'வுக்கு ரஹ்மான் பெற்ற சம்பளத் தொகை 25,000 ரூபாய்! ரஹ்மான் அப்செட்! `ரோஜா' படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் அடித்தது. அதுவரை இல்லாத அளவுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான கேசட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆனால், அந்தப் பாடல்களை தியேட்டர்களில் கேட்ட ரஹ்மான், அப்செட் ஆகியுள்ளார். காரணம், அப்போதுள்ள தியேட்டர்களில் சவுண்ட் குவாலிட்டி சரியில்லை என்பதுதான். `தியேட்டர்களில் இப்படித்தான் பாடல்கள் கேட்குமென்றால் நான் இனி திரைப்படங்களுக்கு இசையமைக்க மாட்டேன்' என்றவருக்கு, `தியேட்டர்களின் தரம் விரைவில் உயரும்' என்று மணிரத்னமும் சவுண்ட் டிசைனர் ஶ்ரீதரும்தான் நம்பிக்கையளித்தனர். பிடித்த ராகம்! ரஹ்மான், சிந்து பைரவி ராகத்தில் உள்ள பாடல்களைத்தான் அதிகம் விரும்பிக் கேட்பாராம். அதுமட்டுமல்லாமல் இசையமைப்பதற்கு இரவு நேரங்கள்தான் ரஹ்மானின் சாய்ஸ்! ரஹ்மான் ஸ்ட்ரீட்! அல்லா - ரக்கா ரஹ்மான் என்பதுதான் சுருக்கமாக ஏ.ஆர்.ரஹ்மான் என்று அறியப்படுகிறது. 2013-ம் ஆண்டு, கனடா நாட்டின் ஒன்டாரியோவில் உள்ள ஒரு தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டது. `ஜெய் ஹோ' பாடலும் `யுவ்ராஜ்' படமும்! ரஹ்மானுக்கு ஆஸ்கர் பெற்றுத்தந்த `ஜெய் ஹோ' பாடல், முதலில் சல்மான் கான் நடிப்பில் வெளியான `யுவ்ராஜ்' படத்துக்காக இசையமைக்கப்பட்டது. அந்தப் படத்தில் பயன்படுத்தவில்லை என்ற காரணத்தால் `ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் பயன்படுத்தப்பட்டது. பெற்ற விருதுகள்! ஒரே ஆண்டில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒரே ஆசியக் கலைஞன் ரஹ்மான் மட்டுமே. அதேபோல 1992 முதல் 2001-ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 ஆண்டுகள் `தென்னிந்திய ஃபிலிம் பேர்' விருதுகளை வென்ற பெருமையும் ரஹ்மானுக்கு இருக்கிறது. தான் இசையமைத்து, வெளியான முதல் படத்துக்கே (ரோஜா) தேசிய விருது பெற்ற முதல் இசையமைப்பாளரும் ரஹ்மான்தான். உலகளாவிய சாதனைகள்! 2003-ம் ஆண்டு, பிபிசி நிறுவனம் வெளியிட்ட `உலகின் சிறந்த 10 பாடல்கள்' பட்டியலில் ரஹ்மான் இசையில் வெளியான `தில் சே' படத்தின் `சைய சையா' பாடல் 9-வது இடத்தைப் பிடித்தது. உலகப் புகழ்பெற்ற `டைம்' பத்திரிகையின் திரைப்படப் பிரிவு ஆசிரியர் ரிச்சர்ட் கார்லிஸால் 2005-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட `10 சிறந்த இசைப்பதிவுகள்' பட்டியலில் ரஹ்மானின் `ரோஜா' திரைப்படத்தின் இசைப்பதிவும் இடம் பிடித்தது. 2007-ம் ஆண்டு `இறப்பதற்குள் கேட்க வேண்டிய 1,000 ஆல்பங்கள்' என்ற தலைப்பில் புகழ்பெற்ற ஆங்கில பத்திரிகையான `கார்டியன்' ஒரு பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ரஹ்மான் இசையமைத்து, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான `பாம்பே' படத்தின் ஆல்பமும் இடம்பெற்றிருந்தது. `உலகின் 100 சிறந்த ஆல்பங்கள்' என்ற பட்டியலை அமேசான் நிறுவனம் 2009-ம் ஆண்டு வெளியிட்டது. இந்தப் பட்டியலில் 45-வது இடத்தைப் பிடித்தது ரஹ்மான் இசையில் வெளியான `லகான்' திரைப்படத்தின் ஆல்பம். ஏர்டெல் ட்யூன்! ஏர்டெல் நிறுவனத்துக்கு ரஹ்மான் அமைத்துக் கொடுத்த ட்யூன், `திரைப்படத்திலோ, ஆல்பங்களிலோ இடம்பெறாமல் உலகளவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட இசை' என்ற பெருமையைப் பெற்றது. ஒரு நிறுவனத்தின் விளம்பரத்துக்காகப் போடப்பட்ட இசையை, 15 கோடி பேருக்கு மேல் டவுன்லோடு செய்ததும் அதுவே முதல்முறை. ஏ.ஆர்.அமீன் பிறந்த தேதி! தந்தையைப்போல இளம் வயதிலேயே இசையமைப்பதில் ஆர்வம் காட்டி வரும் ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீனுக்கும் ரஹ்மான் பிறந்த தேதியான ஜனவரி 6-ம் தேதிதான் பிறந்தநாள். வெள்ளை மாளிகையில் ரஹ்மான்! 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது இரவு உணவுக்கு முன்பாக ரஹ்மானின் இசைக் கச்சேரி நடந்தது. வெள்ளை மாளிகையில் இசைக் கச்சேரி நடத்திய முதல் இந்தியக் கலைஞரானார் ரஹ்மான். அதன் பிறகு, 2012-ம் ஆண்டு ட்விட்டரில், `டியர் Mr & Mrs ஒபாமா, மீண்டும் எனக்குக் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர்க்கான வாழ்த்து அட்டை அனுப்பியதற்கு நன்றி. நீங்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர வேண்டும். பரோடாவில் ஜனவரி 26 நடைபெறவுள்ள என் இசைக் கச்சேரியில் கலந்துகொள்ள வேண்டும்' என்று பதிவிட்டிருந்தார் ரஹ்மான். `பிகில்' - முதல் படம்! திரையுலகில் 27 வருடங்களுக்கும் மேலாக இசையமைப்பாளராக வலம் வரும் ரஹ்மான், முதன்முதலாக வெள்ளித்திரையில் முகம் காட்டியது என்றால் அது கடந்த ஆண்டு வெளியான `பிகில்' படப் பாடலில்தான். சிங்கப் பெண்ணே பாடலில் விஜய், ரஹ்மான், அட்லி மூவரும் தோன்றிய ஃப்ரேமுக்கு திரையரங்குகளில் பிகில்கள் தெறித்தன.

Comments