புலவர் புலமைப்பித்தன் 1935 - 2021 கண்ணதாசன், வாலி எனும் இரு பெரும் ஆளுமைகளுக்கிடையே தனித்துவமாக மிளிர்ந்தவர் புலவர். காதலையும் காமத்தையும் விரசமில்லாமல் எழுதும் கத்தி மீது நடக்கும் கலையில் தேர்ந்தவர் புலவர். (ஆயிரம் நிலவே வா, தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்.., என்ன சுகம் என்ன சுகம்.., இராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான்…) பொதுவுடைமைக் கருத்துகளையும் பாடல்களில் தூவியிருப்பார் புலவர். (நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே.., புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…) எங்கள் மொழியையும் போற்றிப் புகழ்ந்த பாடல்களை எழுதியதோடு (அமுதே தமிழே அழகிய மொழியே…), காதல் பாடல்களிலும் தமிழை மேன்மைப்படுத்தும் வரிகளைச் சேர்த்திருப்பார் (அமுதத்தமிழில் புதுமைக்கவிதை எழுதும் புரட்சிப் புலவன் நீ.., சங்கத்தில் பாடாத கவிதை.., சாதிமல்லிப் பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே.., புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என…). மக்கள் திலகத்துக்கும் நடிகர் திலகத்துக்கும் பாட்டெழுதியவர் மூன்றாந்தலைமுறையைச் சேர்ந்த விஜய் படத்துக்கும் பாட்டெழுதினார். தெறி படத்தில் வந்த, ‘தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்… ஆரிராரோ ஆராரோ…’ புலவர் எழுதிய பாட்டு. மக்கள் திலகத்துக்குப் பிடித்த பாடலாசிரியர். அவருடைய படங்களில் புலவர் எழுதிய காதல், புரட்சி, தத்துவப் பாடல்களே அதற்குச் சான்று. அதிமுகவின் அவைத்தலைவர், தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞர், சட்ட மேலவையின் துணைத்தலைவர் போன்ற பதவிகள் புலவருக்கு வழங்கப்பட்டமைக்கு மக்கள் திலகம் புலவர் மீது வைத்திருந்த மதிப்பே காரணமெனலாம். விட்டுக்கொடுப்பில்லாத ஈழவிடுதலைப் போராட்ட ஆதரவாளர். பாண்டி பசார் சம்பவத்துக்குப் பிறகு அந்த இருவரும் ஒரே நேரத்தில் இருந்த ஒரே வீடு புலவருடைய வீடுதான். 1982 ஒக்ரோபர் ஆறாம் நாள் புலவரின் பிறந்தநாளன்று நடந்தது இது. இருவருமே புலவர் மீது பெருமதிப்பு வைத்திருந்தனர். இறுதிவரையில் புலவரின் ஈழ ஆதரவு நிலைப்பாடு உறுதியாகவே இருந்தது. புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு எம் இறுதி வணக்கம். கடுகு போல் உன்மனம் இருக்கக்கூடாது, கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும். - ‘சாதிமல்லிப் பூச்சரமே…’ பாடலில் புலவர்.

Comments