தமிழ் நாட்டு உள்ளராட்சி தேர்தல் சொல்லும் பாடம் என்ன ?
மூத்த பத்திரிகையாளர் ஐயா
. பா. ஏகலைவன் அவர்களின்
பதிவில் இருந்து...
எகத்தாளம் வேண்டாமே..
----------------------------------
திமுக-வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் எகத்தாள பதிவை பார்த்தேன். சில கட்சிகளை மறைமுகமாக குறிப்பிட்டு, ‘அவ்வளவுதான்’ வீழ்ந்துபோய் விட்டது என்ற நக்கல் தொனி பதிவு அது.
இன்னும் சில திமுக செய்தி தொடர்பாளர்களின் பதிவும், ‘அந்த ரகத்தில்’ இருந்ததை கவனித்தேன். சில யூ டியூபர்களின் கச்சேரியும் அந்த நோக்கில் இருந்தது. ஒரே வார்த்தை, ‘நாம் தமிழர் கட்சி காலி, விழுந்துவிட்டது’ என்ற தொனி. அந்த எம்.பி. பாமக-வையும் மறைமுகமாக இழுத்து நக்கலடித்திருந்தார்.
திடீர் என ஓடிப்போய் சேர்ந்தவர்களுக்கு, படீர் என பதவி கிடைத்தவர்களுக்கும் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
உள்ளாட்சி தேர்தல் என்பதே, ஆளும் கட்சி அதிகம் இருப்பதுதான் நியதி. அதற்கு ப(ண)ல காரணங்கள் உண்டு. முக்கியமானது, ஆளும்கட்சி அந்த வார்டுக்கு, பஞ்சாயத்திற்கு தடையின்றி நல்லதை செய்யும். எதிர்கட்சி, மாற்று கட்சி நபர்கள் என்றால் ‘போராடிதான்’ பெற வேண்டியிருக்கும் என்ற பொது நோக்கம். அதனால் ஆளும் கட்சியையே அதிகம் தேர்வு செய்வார்கள்.
அவ்வளவுதான். எந்த ஒரு அரசியல் கட்சியின் செல்வாக்கையும் இது சரித்துவிடாது.
அவர்களின் எகத்தாளப்படி, நா.த.க. (அல்லது பா.ம.க, அ.ம.மு.க…எந்த ஒரு கட்சியும்) நிரந்தர வெற்றி தோல்வியில் நின்று விடுவதில்லை. அதற்கு எகத்தாளம் போடும் திமுக-வே சாட்சி.
1972-ல் எம்.ஜி.ஆர் அவர்களை கட்சியை விட்டு நீக்கினார் கலைஞர். அவர், அ.இ.அதிமுக-வை தொடங்கினார். அடுத்து வந்த திண்டுக்கல் இடைத்தேர்தல், கோவை நாடாளுமன்ற இடைத்தேர்தல் (கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து) கோவை சட்டமன்ற இடைத்தேர்தல் என தொடர்ந்து வெற்றி முகம்தான். முதன் முதலாக பாண்டிச்சேரியையும் ’அதிமுக ஆட்சி’ என மாற்றினார்.
ஆக, எம்.ஜி.ஆர் தனிக்கட்சி கண்ட பிறகு அடுத்தடுத்து நடந்த எந்த இடைத்தேர்தலிலும் ஆளும் கட்சியான திமுக வெற்றி பெறவேயில்லை.
அதோடு 1977-ல் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் முதல்வராகி, 1987 டிசம்பர் 24.ல் எம்.ஜி.ஆர். இறக்கும்வரை தொடர்ந்து பத்தாண்டுகாலம் திமுக, வீழ்ச்சியில்தான் இருந்தது. அது பட்டியில் அடைக்கப்பட்டிருந்தது. 1984-ல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர், அமெரிக்க மருத்துவமனையில் படுத்துக்கொண்டே வெற்றி பெற்றார். (ஓரே ஒரு வாய்ப்பை எனக்கு கொடுங்கள் என கலைஞர் கெஞ்சி கேட்டும் மக்கள் வாய்ப்பளிக்கவில்லை)
அதன் பிறகு அதிமுக ஜா-ஜெ அணி இரண்டாக பிரிந்த போது கலைஞர் முதல்வரானார்.
ஓராண்டுதான். 1991-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ராஜிவ்காந்தி மரணத்தை ஒட்டி படுதோல்வி அடைந்தது திமுக. கலைஞர் மட்டுமே வெற்றி பெற்றார்.
அப்படியான வீழ்ச்சியில் இருந்துதான் திமுக, 1996-ல் மீண்டும் எழுந்து ஆட்சியைப் பிடித்தது திமுக.
1996- தேர்தலில் வெறும் 4 தொகுதியில் மட்டுமே தக்கவைத்து தொல்வியைத் தழுவிய செல்வி ஜெயலலிதாதான் பிறகு ஒரு பத்தாண்டு காலம், (2011-2021) திமுக-வை பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.
ஆக, ஒரு கட்சியின் வெற்றி தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. ஒரு தோல்வி அல்லது குறைந்த வாக்குகள்தான் கட்சியின் எழுச்சியைத் தீர்மானிக்காது. இதை திடீரென ஓடிப்போன நிர்வாகிகளும், சடீர் என எம்.பியானவர்களும் புரிந்துகொள்ள வேண்டும், என்பதற்காக சொல்கிறோம்.
ஒரே ஒரு முறை, கூட்டணிக் கட்சிகள் இல்லாமல், ஒரே சின்னம் இல்லாமல், கோடிகளைக் கொட்டி செலவழிக்காமல், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு போன்ற நிரந்தர குட்டி ஜமீன்தார்கள் இல்லாமல், சாதி பார்த்து போடும் ஓட்டு தீட்டுடா என சவால் விடாமல் நா.த.க.வைப் போல் தனித்து நின்று வாக்குகளை வாங்கி காட்டுங்கள். அல்லது வெற்றி பெற்று காட்டுங்கள்.
பிறகு உங்கள் நக்கல் நையாண்டியை ஏற்றுக் கொள்ளலாம்.
அடுத்து
இன்னொரு ரகம் என்ன என்றால், பிரபல செய்தி ஊடகங்களே, நடிகர் விஜய் ரசிகர் மன்றம் 100-க்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிகளில் வென்றிருக்கின்றது. ஒன்றிய கவுன்சிலர் பதவியையும் பிடித்துள்ளார்கள்-என வாசித்துவிட்டு, நாம் தமிழரைவிட அவர்கள் அதிகம் என அலசியிருந்தார்கள்.
மாலை சுமார் 6.30 மணிக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். (13.10.21) “நடிகர் விஜயின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வெற்றி என்பதான செய்தியை தேர்தல் ஆணையம் ஏதும் கூறவில்லை. அது உண்மையும் அல்ல. எங்கள் தரப்பில் இருந்து அப்படி ஒரு செய்தி கொடுக்கவுமில்லை” என்றதோடு தேர்தல் ஆணையத்தின் இணைதள தொடர்பையும் அனுப்பி இருந்தார். அதில் திமுக, (கூட்டணி), அதிமுக வெற்றி தகவல்கள் மட்டுமே உள்ளன.
என்றால், இல்லாத ‘விஜய் ரசிகர் மன்றம்-வெற்றி’ என்ற செய்தியை
பிரதான செய்தி ஊடகங்கள் வலிந்து வெளியிட வேண்டிய அவசியம் என்ன? அதன் மூலம் நாம் தமிழர் கட்சி ‘குறைந்தது’ என பரப்ப வேண்டிய அவசியம் என்ன? யாருக்காக அவர்களின் செய்தி ஊடகம் வேலை செய்கின்றது? ஒரு ரசிகர் மன்ற நிர்வாகி சொல்கிறார் என்பதற்காக உறுதிப்படுத்தப்படாத தகவலை செய்தியாக்குவார்களா?
யூ டியூபர்களை விடுங்கள். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை எப்படி வெளியிடுவது என்ற நெறிமுறைகள் தெரியாதவர்கள்-அறியாதவர்கள். ஆனால், பிரதான செய்தி ஊடகங்கள்.?
இந்த பதிவை போடும் நேரம்வரை நாம் தமிழர் கட்சி (உறுப்பினர் அடையாள அட்டை உள்ளவர்கள்) 26 வார்டு கவுன்சிலர்களும், ஒரு ஊராட்சி ஒன்றி கவுன்சிலரும் என வெற்றி பெற்றுள்ளார்கள். பாட்டாளி மக்கள் கட்சியும், அ.ம.முக. -டிடி தினகரன் கட்சியும் அப்படி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பணபலம் இல்லை. கிராமம் வரையிலான கட்டமைப்பு இல்லை.
76 ஆண்டுகால வளர்ச்சி+பல்லாயிரம் கோடி பணத்தோடும் உள்ள திமுக-வோடும், 49- ஆண்டுகால வளர்ச்சி+ பல்லாயிரம்கோடி அதிமுக-வோடும் நாம் தமிழர் கட்சி சமம் ஆகிவிடாது என்ற புரிதலோடு செய்தியை அலசுங்கள். செய்தியாக்குங்கள்.
இவற்றை தவிர்த்துவிட்டு குறிப்பிட்ட ஒரு கட்சி, அதுவும் நாம் தமிழர் கட்சி-சீமான் படுதோல்வி என்ற கட்டமைப்பு ஏன், யாருக்காக? யூ டியூபர்களுக்கும் பெரிய செய்தி நிறுவனங்களுக்கும் என்ன வித்தியாசம்?
Comments
Post a Comment