மர்மமான நிலாவரைக் கிணற்றின் அடிப்பகுதியில் மாட்டு வண்டிகள்! நடந்தது என்ன?
குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்று பார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிலாவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது.அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெற முடியவில்லை.அன்று, பிற்பகல் 2.30 மணி, 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு. குடாநாட்டின் வெப்பநிலை 35 பாகை செல்ஸியஸைக் காட்டியது. ஆனால், குடாநாட்டில் மிகவும் ஆழமான பகுதியில், நீருக்கடியில் அதன் வெப்பநிலை 26 பாகை செல்சியஸ் எனப் பதிவாகியது.ஆம்! அன்றுதான் பல புதிர்களையும் இரகசியங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த நிலாவரைக் கிணற்றின் ஆழம் அறியப்பட்டது.இலங்கை கடற்படையின் சுழியோடிகள், ரோபோக்களின் உதவியுடன் நிலாவரைக் கிணற்றின் ஆழத்தை அறியும் வண்ணம், சகல நவீன பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றியவாறு கிணற்றுக்குள் இறங்கினார்கள்.கிணற்றுக்குள் 55.5 மீற்றர் (182 அடி) சென்றபோது, கீழ்மட்டம் தென்பட்டது. நன்றாக வளர்ந்த பனை அல்லது தென்னை மரம் சராசரியாக 90 அடி உயரம் வரை காணப்படும். அப்படிப் பார்த்தால், சராசரியாக இரண்டு பனை அல்லது தென்னை மரங்களின் உயரம் கொண்டதாக இந்தக் கிணற்றின் ஆழம் காணப்படுகின்றது.கிணற்றின் அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் காணப்படுகின்றன என்பது சுழியோடிகள் கொண்டு சென்று ரோபோக்கள் எடுத்த படங்களின் மூலம் தெரியவந்தது. ஒரு வண்டில் முற்றாகச் சிதைவடைந்த நிலையிலும் மற்றையவை மாட்டு வண்டிகள் என உருவத்தை அடையாளம் காணக்கூடியவாறும் காணப்படுகிறது.இந்த மாட்டு வண்டிகள் கிணற்றுக்குள் எவ்வாறு வந்தன அல்லது விழுந்தன என்பது தொடர்பில் எதுவித தகவல்களும் கிடையாது. வண்டில்களின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, இந்தச் சம்பவம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.





Comments
Post a Comment