பிரான்ஸ் பாரிஸ் 850 ஆண்டுகள் பழமையான நோட்ர-டாம் தேவாலயத்தில் பெரும் தீ விபத்து.

.பாரிஸ்நகரின் மிகவும் பிரசித்திப்பெற்ற கத்தோலிக்க தேவாலயம் தீயில் எரிந்து சேதம்.
Incendie à Notre-Dame. PARIS

பாரிஸ் நகரின் தனித்துவம் மிக்க அடையாளங்களில் ஒன்றான புராதன கத்தோலிக்க தேவாலயத்தின்(Notre-Dame de Paris) பெரும் பகுதிகளை தீ விழுங்கிக்கொண்டிருக்கிறது.

850 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த அருங் கலைப் பொக்கிஷம் முழுமையாக தீயில் அழிவதைத் தடுக்க பெருமெடுப்பிலான தீயணைப்புப்பணி முழு வீச்சில் நீடிக்கின்றது.

தேவாலயத்தில் கடந்த சில நாட்களாக மறுசீரமைப்பு வேலைகள் நடைபெற்று வந்த சூழ்நிலையில் இன்றிரவு ஏழு மணியளவில் அங்கு தீ மூண்டிருக்கிறது. 13, மற்றும் 19 ஆம் நூற்றாண்டு கால கட்டட வேலைப்பாடுகள் அமைந்த பகுதியை தீ நாசமாக்கி உள்ளது. ஆலயத்தின் அழகிய முகடுகளில் தீ கொளுந்துவிட்டெரியும் காட்சிகள் உலகெங்கும் ஒளிபரப்பாகியுள்ளன.

பிரதமர், அமைச்சர்கள், எலிஸே மாளிகை அதிகாரிகள் சகிதம் அதிபர் மக்ரோன் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார்.

நாட்டில் உருவாகியிருக்கும் மக்கள் போராட்டங்களை ஒட்டி அதிபர் மக்ரோன் மக்களுக்கு ஆற்றவிருந்த தொலைக்காட்சி உரை இந்த தீ அனர்த்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

ஈஸ்டர் காலத்தில் கத்தோலிக்கர்களை மட்டுமன்றி நாடு முழுவதும் சகல மக்களையும் உணர்வு ரீதியில் பெரிதும் பாதித்திருக்கும் இந்தத் தீ அனர்த்தம் குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.பிந்திய செய்தியாக இந்த தேவாலயத்தை புனரமைப்பதுக்கு பிரான்ஸ் மில்லியனர் 100 மில்லியன் யூரோ கொடுத்து உதவ போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன

Comments